Wednesday 6 December 2017

பொங்கல் விழா விதிகள் - தலையால் நடந்தான் குளம்

நமது ஊரில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொங்கல் விழாவில் கடைப்பிடித்து வரும் எழுதப்படாத விதிகள் ( விதிகள் என்பதை விட சுயக்கட்டுப்பாடு என்று கூறுவதே சாலப்பொருத்தம், சில நேரங்களில் மீறப்பட்டிருக்கலாம் ஆனால் பாதிப்புகள் இருந்ததில்லை )



 குறிப்பு: இவையனைத்தும் நமது ஊர் மக்கள் செயல்பாட்டு நெறியாளர் தெய்வத்திரு.சக்திவேல், ஊரின் நலவிரும்பி , இளைஞர்களின் முன்னோடி தெய்வத்திரு.சமுத்திரராஜ் அவர்களுக்கிடையேயான கடந்த ஆண்டு கலந்துரையாடலின் போது குறிப்பெடுக்கப்பட்டது.


விழாக்குழு:

1.அரசியல் பிரதிநிதிகள் விழாக்குழு உறுப்பினர் ஆகக்கூடாது (ஆகினாலும் விழாவில்/மேடையில் அரசியல் பேசக்கூடாது.

2.மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரும்,அனுபவமிக்கவர்களையுமே  விழாக்குழு தலைவர் மற்றும்  துணைத்தலைவராக  இளைஞர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

3.ஒட்டுமொத்த  இளைஞர்களின் ஆதரவு பெற்றவரே  விழாக்குழுவின் செயலாளராகவும் , பொருளாளராகவும் தலைவரால் முன்மொழியப்படவேண்டும்.

4.ஓன்று (அ) ஒன்றுக்கு மேல் செயலாளர்களை (அதிகபட்சம் 4 பேர் )  தேர்வு செய்யவும் அவர்களின்கீழ் செயல்படவும் இளைஞர்களுக்கு முழு உரிமை உண்டு.

5.விரும்பும் தன்னார்வலர்கள் விழாக்குழுவுடன் இணைந்து பணியாற்ற முழு அனுமதி உண்டு.

6.நன்கொடைகள் அன்பளிப்புகள் பொருளாளரால் முறையாக கணக்கிடப்பட்ட வேண்டும். குளறுபடிகளோ, மக்கள் விரும்பினாலோ அல்லது  சந்தேகம் எழும்பினாலோ கணக்கினை மக்களிடம் சமர்பிக்க கடைமையுள்ளவர் பொருளாளர்.

7..ஒலி-ஒளி , மற்றும் பந்தல் அமைப்பினை தேர்வு செய்வதில் விழாக்குழுவிற்கு முழு சுதந்திரம் உண்டு, தேவைப்பட்டால் நாட்டாமையிடம் ஆலோசனை கேட்கலாம்.

8.எந்தவொரு போட்டியினையும் நீக்கவோ, சேர்க்கவோ மாற்றி அமைக்கவோ  விழாக்குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.

9. வெற்றி/தோல்வி  சர்ச்சைகள் எழும்பட்சத்தில்  விழாக்குழுவின் முடிவே இறுதியானது.

1௦.  சிறப்பு விருந்தினர்களாக காவலர்களை அழைத்துக்கொள்ளவதற்கு நாட்டாமையுடன் விழாக்குழுவினரும் செல்லக்கடமைப்பட்டவர்கள்.

11. விழாக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மதுவருந்திவிட்டு செயல்படுவதாக தெரியவந்தால் அவர்களை நீக்க இளைஞர்களுக்கும், மக்களுக்கும் நேரடி உரிமை உண்டு.


போட்டி விதிகள்:

1.குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் குறைந்தது தலா 3 போட்டிகளாவது நடத்தப்பட வேண்டும்.

2.போட்டி அறிவித்து 5  நிமிடத்தில் இரண்டுக்கும் மேல் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளவில்லையென்றால் அந்த போட்டியை நீக்கவோ (அ) கலந்துகொண்டவர்களையே  வெற்றியாளராக அறிவிக்கலாம்.

3.பெண்கள் பிரிவு போட்டிகளில் நமது ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணம் செய்துகொடுக்கப்பட்ட பெண்கள், வெளியூர்களில் இருந்து  நமது ஊருக்கு வந்த மருமகள்கள் கலந்துகொள்ள முழு உரிமை உண்டு.

4.ஆண்கள் பிரிவு போட்டிகளில்  நமது ஊர் இளைஞர்களும், நமது ஊர் மருமகன்களும்( நமது ஊருக்கு வரி கொடுப்பவராக இருக்க வேண்டும்) கலந்து கொள்ளலாம்.

5.குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள் பிரிவுகளில் மக்களுக்கு ஆட்சேபனைகளோ மனத்தாங்கலோ இல்லையென்றால்  நமது வெளியூர் சொந்தங்களும் கலந்துகொள்ளலாம்.

6.பாட்டுப்போட்டிகளில் சினிமா பாடல்கள்/கட்சிப்பாடல்கள்  அறவே கூடாது, ஜாதிப்பாடல்கள் தவிர்ப்பது நல்லது.

7.போட்டிகள் நடைபெறும் நேரத்தை சூழ்நிலைகளுக்கு தக்கவாறு மாற்றி அமைக்கலாம்.

8.எந்த போட்டிக்கும் பரிசு வழங்க விரும்புபவர்கள் அந்த போட்டி தொடங்கப்படுவதற்கு முன்பாகவே விழாக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்.

9.பரிசு வழங்குபவர்கள் தங்களுக்குள்ளான பரஸ்பர புரிதலுடன் போட்டிகளை மாற்றி பரிசுகளை வாங்கி வழங்கலாம்.

10.ஏதாவதொரு போட்டிக்கு பரிசு வழங்க பொறுப்பேற்றுவிட்டு கடைசி நேரத்தில் விலகுவது அறம்மல்ல, அவ்வாறானதொரு  இக்கட்டான சூழ்நிலை சந்தர்ப்பதால் ஏற்படுமாயின் இரவு நிகழ்ச்சிக்கு 2 மணி நேரம் முன்னதாகவே விழாக்குழுவிடம் தெரிவிப்பது நலம்.

11. பெண்கள் சம்பந்தப்பட்ட போட்டிகளை சிறப்புடன் செயல்படுத்த பெண்களின் சார்பாக பெண் தன்னார்வலர்கள் விழக்குழுவுடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பாய் அமையும்.



பொது விதிகள் :

1.இளைஞர்களின் சம்மதங்களை ஏகமனதாக பெற்றவரே செயலாளராக செயல்படுவர், ஆதலால்தான் செயலாளரின் கருத்துக்கு இளைஞர்கள் செவிமடுப்பர்.

2.நிகழ்ச்சிகளின்போது இடையூறு விளைவிப்போரையும், விரும்பத்தகாத செயல்களையும் செய்பவர்களை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு முழு அதிகாரம் உண்டு.

3.விழாச்செயலாளர்களோ தன்னார்வலர்களோ போட்டியின்போது ஒருதலைப்பட்சமாக செயல்படுதல் கூடாது. விருப்பு வெறுப்புக்களை கடந்தவர்களே விழாக்குழு செயல்பாட்டாளர்களாக  இருக்கவேண்டும். மீறுபவர்கள் அதிரடியாக  நீக்கப்பட்டு கண்டிப்புக்குள்ளாக்கப்படுதல் நேரிடும்.

4.விழாக்குழுவினரை வழிநடத்தி, போட்டிகளை நெறிப்படுத்தி விழாவினை சிறப்பாக நடத்துபவராக தலைவர்கள்/துணைத்தலைவர்கள் இருந்திடல் வேண்டும்.

5.தலைவர்கள் மனப்பக்குவமுள்ளவராக, சுயநலமற்றவராக, சமயோசித முடிவெடுப்பவராக ,இளைஞரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருபவராக, விழக்குழுவினை வழிநடத்தும் ஆளுமையுடையவாரக இருத்தல் வேண்டும்.

#####


நமது சுற்றுவட்டாரத்திலே நம் ஊரைப்போல் வேறெங்கும் இதுபோன்று சிறப்பாக பொங்கல் விழாக்களை கொண்டாடப்படுவதில்லை என்கிற பெருமைகளைகளையும்,ஊரின் ஒற்றுமையையும் வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துக்கூறி, பொங்கல் விழாவில் அவர்கள் காட்டும் ஆர்வங்களையும புரியும் சாதனைகளையும் கண்டு பெருமிதம் கொள்வோம்.


வாழ்க தலையால் நடந்தான் குளம்! வளர்க நம் ஒற்றுமை!!


 கற்பி !  ஒன்றுசேர்!! புரட்சி செய்!!!

Wednesday 29 November 2017

மானூர் குளம் தேவைகளும் தீர்வுகளும் (பாகம்-2)


மானூர்குளம் நிரம்பவிடாததற்கு பின்னாலுள்ள அரசியல் காரணங்கள் ஐந்தாம் வகுப்பு குழந்தைக்குகூட தெரியுமென்பதால் நமது கடமை,மானூர் குளத்தின் பயன்கள் மற்றும் இழப்புகள் பற்றி ஆராயலாம்.

மானூர்குளம் என்பது ஏதோ கனமழைக்காலங்களில் மட்டும் நிரம்பி 2-3 பூ நெல்விளைவதற்கு மட்டும் பயன்பட்டு வந்தது என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. சற்றே யோசித்துப்பாருங்கள், 9 வருடங்களுக்கு ஒருமுறை நிரம்புவதற்காக 20 ஆண்டுகள் உழைத்து குளம் கட்டவேண்டிய அவசியமென்ன?! கரிகாலனின் கல்லணைபோல் ஆற்றை மறித்துக்கட்டாமல் கால்வாய் எடுத்து குளம் வெட்டியதன் காரணமென்ன?!. எந்த அணைகளும் இல்லாத அந்த காலத்திலே நெல்லைக்கு தமிழகத்தின் 2-வது நெற்களஞ்சியமென்ற பெயர் வந்தது எப்படி?

அக்காலத்திலே சித்தாற்றினால் ஆற்றுப்படுக்கை மற்றும் ஆற்றுக்கு வடபகுதி கால்வாய் போக மீதி தண்ணீர் வீணாக சீவலப்பேரி வழியாக கடலைச்சென்றது.அதேபோல் தாமிரபரணியும் ஆற்றோரங்கள், ஆற்றின் தென்பகுதி மற்றும் நெல்லை நகரை வெள்ளமாய் கடந்து சீவலப்பேரி வழி கடல் கலந்தது ஆக அக்காலத்திலே தடுப்பணையில்லாமல் வெள்ளமாய் செல்லும் ஆற்றைக்கொண்ட ஒரு ஊருக்கு 2-வது நெற்களஞ்சியம் என பெயர் வரக்காரணம், ஆண்டு முழுவதும் மானூர் குளத்திற்கு 2 ஆறு மூலமாகவும் நீர் வந்திருக்கவேண்டும்;இதனால் மானூர் கரையிலிருந்து சீவலப்பேரி கடைமடைவரை முப்போகம் நெல் விளைந்திருக்க வேண்டும் என்பதேயாகும்.

ஆதிகாலம்போல் ஆண்டுதோறும் குளம் நிரம்பினால்....
*சுற்றுவட்டார தென்னை,பனை உயிர்பித்திருக்கும்.
*சுற்றுவட்டார நிலத்தடி நீர் உயரும்.
*மண்குளிரும்;மனம் குளிரும்.
*சிப்காட் வளாகங்களில் உத்தரவாதமில்லாத ஒப்பந்த தொழிலாளர்களாக போகவேண்டிய நிலை இருக்காது.
*கலப்பை பிடித்த கை கல்லுடைக்க செல்லும் அவலநிலை மாறும்.
*மரங்களின் எண்ணிக்கை உயரும் புவி வெப்பமாதல் சிறிதாயினும் குறையும்.
*மீன் உற்பத்தியில் தன்னிறைவு.
*கால்நடைகள், நாட்டுமாடுகளின் எண்ணிக்கை உயரும்.
*குளம் மிகச்சிறந்த சுற்றுலாத்தளமாக மாறும்.
*மொத்தத்தில் நமது சுற்றுவட்டாரமே சொர்கமாக மாறும்.

மானூர் குளத்திற்கு நீர் வேண்டும் என்பது நமது உரிமை என்பதைவிட அது அரசாங்கத்தின் கடமை; இந்த நேரத்தில் 1100 ஆண்டுகளுக்கு முன்னரே எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் நம் சந்ததியும் நம் ஊரும் பிறர் கை எதிர்பாராமல் வாழ வேண்டும்,உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும் என சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக உயிரைக்கொடுத்து உழைத்து குளம் வெட்டி, கால்வாய் அமைத்து  பாசன பரப்புகளையும் வசதிகளையும் பெருக்கிய நமது முன்னோர்களின் தியாகத்திற்கு தலைவணங்கி மரியாதை செய்கிறது நமது விண்ஸ்டார் குழு.

அரசாங்கத்திற்கும் மாவட்ட ஆட்சியாளருக்கும் ஒரு வேண்டுகோள்..
*முக்கூடலிலிருந்து குளத்திற்கு வந்த பழைய கால்வாயை புணரமைத்து சிறு ஓடையளவாவது தாமிரபரணியின் உபரிநீர் வர வழி செய்யுங்கள்.
*குளம் வெட்டிய நாளில் இருந்து தூர்வாரவில்லையென்பதால் தற்போது 16 அடி குளத்தில் 6 அடி மண்மேடாக உள்ளது.தயவு செய்து இதனை ஆவன செய்யுங்கள் இதற்குகூட நிதி இல்லையென்றால் எங்கள் விவசாயிகளுக்காவது அனுமதி தாருங்கள் நாங்களே தூர் வாரிக்கொள்கிறோம்.
*வீரகேரளம்புதூரில் சித்தாற்றிலிருந்து பிரியும் கால்வாயையாவது ஆழப்படுத்தி அகலப்படுத்துங்கள் இதனால் மழைக்காலங்களில் நீரானது சித்தாற்றில் வெள்ளமாய் சென்று வீணாய் கடலில் கலக்காமல்  உங்கள் சாப்பாடு உற்பத்தியாக பயன்படும்.
எங்கள் முன்னோர்கள் செய்த தியாகமும் நோக்கமும் முழுமை பெறவும்,அவர்களின் உழைப்பிற்கு மரியாதை கொடுக்கவும்,உழைப்பின் பயன் அறியவும் இந்த மூன்றை மட்டுமாவது செய்யுங்கள்; இந்தியாவின் முதுகெலும்பை நிமிரச்செய்யுங்கள்.

மாவட்ட ஆட்சியாளர் அவர்களே! இதில் எதைச்செய்வதற்கும் நிதி இல்லை என்று மழுப்புவீர்களானால் எங்களிடம் வாருங்கள் வீட்டிற்கு நூறு தருகிறோம் எங்கள் வருங்கால சந்ததிகளுக்காக!! உலகத்திற்கே சோறு போட்டவன் ஓயின்ஷாப்பில் நிற்பதை சகிக்கமுடியவில்லை!!!.

---------------முற்றும்-------

Tuesday 28 November 2017

ஆற்றின் மீது வளர்ச்சி(அதிர்ச்சி)

நமது ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களால் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலான இடைவிடாத கோரிக்கைகளால் நமது ஊர்-புதுக்குடி சாலையை புதுப்பிக்கும் பணியும் ஆற்றின் மீது பாலம் அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இதனால் எத்தனை பெரிய மழை பெய்தாலும், வெள்ளம் வந்தாலும் பள்ளி மாணவர்களின் கல்வி தடைபடாது 2 கிமீ தூரமுள்ள புதுக்குடிக்குச் செல்ல கிட்டத்தட்ட 16 கிமீ சுற்ற தேவையிருக்காது. இப்பணி நடைபெற முயற்சி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நமது விண்ஸ்டாரின் சார்பாக நன்றிகள் பற்பல.

நமது ஊர் ஆற்றைப்பற்றி எல்லோருக்குமே நன்றாக தெரியும் மழைக்காலங்களில் கட்டுக்கடங்காத வெள்ளமும் கோடைகாலங்களில் பாதம் பொத்துபோகும் அளவிற்கு வெப்பமும் இருக்கும். நமது ஊர் மற்றும் சுற்றுவட்டாரங்களோ வானம் பார்த்த பூமி,
இத்தகைய சூழலில் நாம் பெய்யும் மழையையும் ஓடும் ஆற்றினையும் முடிந்தளவுக்கு தடுப்பணையால் தடுப்பதன் மூலமாக எதிர்வரும் கோடைகால வெப்பத்தில் இருந்து ஓரளவிற்கு தப்பிக்கவும், கோடைகாலத்தில் ஆடுமாடுகளுக்கு குடிதண்ணீராகவும், குறைந்தபட்சம் ஆற்றங்கரையிலாவது பச்சைபசும் புல் முளைத்து கால்நடைகளுக்கு ஓரளவேனும் பசியை போக்கும் வழி செய்யலாம்.

மேலும் தடுப்பணை இருந்தால் வெள்ளம் வடிந்தபின் செல்லும் மிதமான நீரோட்டத்தில் காலை மாலை குளியல், துணிதுவைக்க, வாகனங்கள் கழுவ, கால்நடைகளுக்கு தண்ணீர், மீன் பிடிக்க, குழந்தைகள் நீச்சல் பழக,  என 3 வயது முதல் 80 வயது வரையுள்ளவர்களுக்கு ஏராளமான பயன் தரும்.மிக முக்கியமாக நமது ஆற்றின் மண்வளம் காக்கப்படுவதுடன் நமது வீட்டின் சிறு சிறு சிமென்ட் பூச்சு வேலைகளுக்கும் கண்டிப்பாக பயன்படும். முன்பிருந்த தரைப்பாலம் இத்தனை நன்மைகளையும் தன்னையறியாமலே நமக்கு பயனளித்துக்கொண்டிருந்தது. "நமது ஆற்றில் ஒருமுறை வெள்ளம் வந்தால் அதன்மூலம் ஒரு மண்டலத்திற்கு(48 நாட்கள்) பயனிருக்கும்" என்னும் வழக்கச்சொல்லை நம் ஊரின் மூத்தோர்கள் அனுபவித்து  கூறியதற்கு மூலகாரணமே இந்த தரைப்பாலம்தான்.
இந்த தரைப்பாலம் இல்லாததன் விளைவை
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்தின் மூலம் நிச்சயமாக அறிந்துகொண்டோம். மேலும் முதன்முறையாக நமது ஆற்றினால் நமது ஊருக்கு சிறிதளவு பயனும் ஏற்படவில்லை என்ற நிலை கண்டு கலங்கி நின்றோம்.

நிற்க, நமது ஆற்றின் மீது பாலம் வேண்டாம் முன்பிருந்த தரைப்பாலமே போதும் என்று பிற்போக்குத்தனமான, முட்டாள்தனமான முடிவை விண்ஸ்டார் குழு ஒருகாலும் கூறாது. சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னரே சிறுகிராமமாய் இருந்த நமது ஊருக்கு வலிமையான,அகலமான தரைப்பாலம் அமைக்க நிதி ஒதுக்கி சிறப்பாக கட்டியது சாத்தியமென்றால், தற்போது கட்டிவரும் பாலத்தின் அடியினிலே 3-4 அடி உயரத்தில் வலிமையான தடுப்புச்சுவர் கட்டுவது சாத்தியமே. புதுப்பாலத்தில்தான் ஊரின் வளர்ச்சி உள்ளது. ஆனால் தரைப்பாலத்தில்தான் ஊரின் மகிழ்ச்சி உள்ளது. தடுப்பணைகளுடன் கூடிய மேம்பாலம் கட்டுவதாலே 100 விழுக்காடு வளர்ச்சி என்பதற்கு சாலப்பொருத்தம்.

இது பற்றி நமது விண்ஸ்டார்குழு நண்பர்கள் பாலம் கட்டும் ஒப்பந்தக்காரர்களிடம் பேசியபோது அவர்,"இது பற்றி உங்கள் ஊர் பெரியவர்களும், நாட்டாமைகளும் எங்களுடன் இணைந்தோ அல்லது நேரடியாகவோ அதிகாரிகள் வசம் வலுவான கோரிக்கை வைத்தால் அவர்கள் நிச்சயமாக நிதி ஒதுக்குவார்கள் நாங்களும் தடுப்பணை கட்டித்தர தயாராக இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
ஆக நமது நினைவலைகளை மீட்க, ஆற்றின் பயன்களை பாதுகாக்க, மண்ணரிப்பைத் தடுக்க, நமது ஆற்றினால் நாம் பயன்பெற இந்த கோரிக்கைகளை முன்னெடுப்போம். இல்லையேல் எதிர்காலத்தின் மழைக்காலங்களில்  புதுப்பாலத்தின் வழியே ஆற்றைக்கடக்கையில் "நான் இங்குதான் நீச்சல் பழகினேன்" எனக் கூறினால், 'புளுகாதீக தண்ணியே நிக்காத ஆத்துல நீச்சல் பழகுனாங்களாம்; அத நாங்க நம்பனுமாம்; என்று நமது வருங்கால சந்ததி நம்மளை பைத்தியக்காரரா இருப்பாரோ.. என்கிற ரீதியில் பாா்க்க நேரிடும்.

(கொசுறு: நமது ஆற்றைவிட பெரிய வலிமையான வெள்ளம் வரக்கூடிய சிற்றாற்றின் மீதுள்ள தடுப்பணையால் கட்டாரங்குளம் அடையும் பயனையும், 10 கிமீ தள்ளி அதே ஆற்றில் பிராஞ்சிரிக்கு தெற்கே உள்ள தடுப்பணை இல்லாத பாலத்தால் அந்த இடமே புதர் காடுகளாய்,அச்சுருத்தலை ஏற்படத்த தக்கதாய் இருப்பதையும் கருத்தில் கொள்க.)

விண்ஸ்டார் குழுவின் தீபாவளி கொண்டாட்டத்தில் நடந்த சில சுவாரசியங்கள்..


(பின்குறிப்பு: சில கோக்குமாக்கான தகவல்களை  போட்டு உடைக்கவேண்டியிருப்பதால் சில சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நாயகர்களின் பெயர் வெளியிட விரும்பவில்லை)
இந்தாண்டு தீபாவளித்திருநாளை முன்னிட்டு என்றைக்கும் இல்லாதவாறு விண்ஸ்டார் அணியின் மாமன்மச்சான்கள் ஓர் அணியாகவும் அண்ணன் தம்பிகள் ஓர் அணியாகவும் என இரண்டாக பிரிந்து பலபரீச்சை நடத்தலாம் என ஏகமனதாக முடிவு செய்தோம்.
*ஓர் அணிக்கு சீனியர் சிங்கம் சக்திவேல் அவர்களும் மற்றொரு அணிக்கு பொறுமையின் சிகரம் மாடசாமி அவர்களும் தலைமை தாங்கினர். அன்று களத்தில் வீரர்கள் 22 பேர் தவிர பார்வையாளர்கள் எண்ணிக்கையே 40க்கும் அதிகம்.(உற்சாகபானம் அருந்திவர்களும் அதில் அடக்கம்).
* முதல்போட்டியில் முதலில் பந்து வீசிய அணியில் ஒரு சிறந்த பவுலர் 3 பந்திலே 27 ரன்கள் மாமன் மச்சான் அணிக்கு வாரி வழங்கினார் அதன்பிறகுதான் தெரிந்தது அது அவர் வழங்கவில்லை அவருக்குள்ளிருந்த உற்சாகபானம் வழங்க செய்தது என்று.
*8 ஓவர் கொண்ட போட்டியில் 3 ஓவர் முடிவிலே சக்திவேல் அவர்களின் அணி 40-ஐ தாண்டியது.பிறகு அப்படி இப்படி எப்படியோனு 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என  இலக்கு வைத்தது.
*அதனைத்தொடர்ந்து நிதானமாக சேஸிங்கை தொடர்ந்த அண்ணன் தம்பி அணி ஒருகட்டத்தில் சொதப்பிய அணி பின் கிரிதர், இசக்கிமுத்து அவர்களின் கூட்டு முயற்சியால் அடித்து நொருக்கியது.( இந்தமாதிரி சரமாரியாக அடிப்பதற்கு அவர்களுக்குள் உற்சாகபானம் சென்றிருக்க வாய்ப்பிருக்கலாம் என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது).
* கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில் தூக்கியடித்த பந்தை நான்கு மாதத்திற்கும் மேலாக மைதானம் பக்கம் வராமலிருந்த திரு.செந்தூர்பாண்டி எல்லைக்கோட்டிற்கு அருகே அற்புதமாக டைவ் அடித்து பிடித்து அவர்கள் அணியை வெற்றிபெற செய்தார்.
*2-ம் முறை அண்ணன்-தம்பி அணி முதலில் பேட் செய்து நிர்ணயித்த இலக்கை மாமன்-மச்சான் அணி எட்டமுடியாமல் அதே 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தது.
*இரண்டு போட்டிகளுக்கு இடையில் சிறிது சலசலப்பு வந்தபோதும் சரி, இரண்டு அணியும் சம வெற்றியை கொண்டாடும்போதும் சரி, சற்று வடக்கேயுள்ள ஓடையில் எதுவுமே தங்களை சீண்டமுடியாதவாறு
செவ்வாய் கிரகத்தில் இருந்த இரு ஜீவன்கள், 2 மேட்ச் முடிந்தபின் "என்னப்பா டாஸ் போட்டீங்கள்லா அப்ப மேட்ச் ஆரம்பிங்கப்பா" என்று கேட்டனர்.
* சொல்லின் செல்வர் திரு.ஸ்ரீமுருகன் அவர்கள் அண்ணன்-தம்பி அணி பவுண்டரிகள் அடித்தால் 'அட்டகாசமான அற்புத ஷாட் நீ கலக்கு தம்பி' என்றும், எதிரணி விக்கெட் எடுக்கையில் 'மாப்ள உங்கள மாதிரி பவுலிங் போடுறவங்க இந்த ஜில்லாவிலே இல்ல' என இருபக்கத்தையும் உற்சாகப்படுத்தினார். என்ன தலைவரே இரண்டு பக்கமும் கோல் போடுறீகனு கேட்டால்,  "ஏலேய் தம்பி உடையான் படைக்கு அஞ்சான்டா, மலைக்கு போகனும்னாலும் மச்சான் துணை வேணும்டா" என வில்லங்கமான விளக்கமளித்தார்.
இரண்டு போட்டிகள் நடந்து இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற போதிலும் இரண்டு வெற்றிகளுக்கும் இரண்டு அணிகளுமே எல்லா பார்வையாளர்களோடு  கொண்டாடியது சிறப்பாகவும் மறக்கமுடியாத தீபாவளியாய் நினைவலைகளில் பதிந்தது.
(மீண்டும் பின்குறிப்பு: போட்டி நடந்தபோது எந்தவித போட்டோக்களும் நாங்கள் எடுக்கவில்லை என்பதால் நாங்களும் உற்சாகபானம் அறிந்திருக்கலாம் என்று நீங்கள் தவறாக எண்ணவேண்டாம். போட்டோ எடுக்க சுயநினைவு இல்லை மன்னிக்கவும் ஞாபகமில்லை).

மானூர் குளம்-வரலாறும் சிறப்பும்

ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற மன்னனால் 7–வது நூற்றாண்டு இறுதியில் தொடங்கி 8–ம் நூற்றாண்டு தொடக்கம் வரை இந்த குளம் வெட்டப்பட்டுள்ளது.(தஞ்சை பெரியகோவிலைவிட மூத்தது).
*தமிழகத்தின் முதல் பெரிய குளம் இதுவே.
*பள்ளமடை மற்றும் சுற்றுவட்டார கிராமத்து மக்கள் இந்த குளத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவ்வாறு குளத்தை வெட்டுவதற்கு செல்லும்போதும், வரும்போதும் ஓரிடத்தில் தலா 2 கூடை மண் அள்ளி போட்டதன் மூலம் உருவானதுதான் பள்ளமடைகுளம்.
*அக்காலத்தில் திருப்புடை மருதூருக்கும், முக்கூடலுக்கும் இடையே மண் அணை கட்டி தாமிரபரணித்தண்ணீரையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் நாளடைவில் மண் அணை உடைந்து காணாமல் போய் விட்டது. அத்தோடு மானூர் அணைக்கு தாமிரபரணி தண்ணீர் வரத்தும் நின்று போய் விட்டது. எனவே தாமிரபரணி தண்ணீரும் மானூர் பெரிய குளத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையே ஆகும். ஆனால் அது தொடர்பாக ஆய்வு செய்த சமகால பொதுப்பணித்துறை அதிகாரிகள் தாமிரபரணியில் இருந்து மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் அனுப்புவது சாத்தியம் கிடையாது என்று கூறிவிட்டனர்.(முக்காலத்தில் மட்டும் எப்படி சாத்தியமானது?? இதில் முழுக்கமுழுக்க அரசியல் உள்ளது).
மேலும் இந்தக்குளம் சிற்றாற்று நீரினால் மட்டுமே நிரம்பக்கூடிய குளம் என்று தற்கால மக்கள் நம்பும்படியாக சில தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளால் வரலாறு  திரிக்கப்பட்டு வருகிறது. அப்போதுதான் குளம் நிரம்பத்தேவையான நீர்வரத்து வராமல் போகும் தத்தமது குவாரிகளுக்கும் மூடுவிழா நடைபெறாது என்பது அவர்களது எண்ணம்.ஆனால் உண்மையிலே இந்தக்குளத்திற்கு பருவகாலங்ளில் புண்ணிய பெதியமலையின் தென்பகுதி நீரான தாமிரபரணியும், வடக்குநோக்கி விழும் குற்றால நீரும் சித்தாற்றிலிருந்து வந்ததிற்கான வரலாற்றுச்சான்று உள்ளது.உலகத்தில் வேறெங்குமே ஒரே குளத்திற்கு 2 ஆற்றுக்கால்வாய் கட்டியதில்லை (நதிநீர் இணைப்பென்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும்!!)
குளத்தின் உட்பரப்பு மட்டும் 1200 ஏக்கர் மேலும் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள அடவிநயினார் அணை, குண்டாறு அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணை என 4 அணைகளின் நீர் கொள்ளளவை விட அதிகளவு கொள்ளளவு கொண்ட குளமிது. ஒரு குளத்திற்கான தகவமைப்பில் கட்டப்பட்டிருந்தாலும் இதன் கொள்ளளவு மற்றும் இதனால் நேரடியாகவும் கால்வாய் வாயிலாகவும் பாசன வசதிபெறும் பரப்பையும்(8500 ஏக்கருக்கும் மேல்) வைத்துப்பார்த்தால் இது மன்னர்காலத்தில் கட்டப்பட்ட ஒரே அணை.
*இந்த குளத்தினால் நேரடியாக மற்றும் கால்வாய் மூலமாக பயன்பெறும் ஊா்களை இணைத்து உருவாக்கியதுதான் மானூர் ஊராட்சி ஒன்றியம்.(மேற்கே உக்கிரன்கோட்டை வடக்கே அழகிய பாண்டியபுரம் தெற்கே சேதுராயன்புதூர் கிழக்கே கங்கைகொண்டானும் சுற்றுவட்டாரமும்).
*பஞ்சகாலத்திலே(1895-96) தாமிரபரணிக்கு வடக்கு பகுதி ஊர்களை காப்பாற்றியது இக்குளம்தான்.
*ஆற்றை மறித்துக்கட்டுவதுதான் அணை வறட்சி காலங்களில் ஆற்றில் நீர் ஓடாமல் மணல்லாரி ஓடுவதும், பாசனத்திற்குகூட திறந்துவிடாமலும், வெள்ள காலங்களில் மொத்தநீரையும் கடலுக்கு செலுத்துவதும்தான் அணையினால் முடியும். ஆனால் நமது மானூர்குளம் கட்டமைப்பு அவ்வாறு அல்லாது மழைக்காலங்களில் கால்வாய் மூலம் ஆற்றுநீரைப்பெற்று வறட்சி காலத்தில் பாசனவசதிக்கு உதவும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது இதனால் ஆற்றோர மக்களுக்கு வெள்ளப்பாதிப்பும் இருந்ததில்லை வறட்சிப்பாதிப்பும் இருந்ததில்லை(அக்காலத்திலே என்னே ஒரு அருமையான திட்டம்!! அப்போது பொறியியல் கல்லூரில படிக்காத பொறியாளர்கள் இருந்ததால இது சாத்தியமாயிருக்கு).
கடந்த 28 ஆண்டுகளில் ஓரிருமுறை மட்டுமே நிரம்பியிருக்கிறது அதிலும் ஒருமுறை
சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீீர் வேண்டி பள்ளமடை மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்ததின் எதிரொலியாக அப்போதைய பொதுப்பணித்துறையமைச்சர் சட்டமன்றத்தில் உரையாற்றிய சிலகாலங்களிலே குளம் பெருக்கப்பட்டது.இதனால் சுமார் 60-க்கும் மேலதிகமான கிராமங்கள் பயனடைந்தன. ஆக குளம் பெருகுவது என்பது குதிரைக்கொம்பு விஷயமல்ல சிலபல பணமுதலாளி மற்றும் அரசியல் காரணங்களால் பலவந்தமாக குளத்திற்கான நீர்வழிகள் அடைக்கபட்டுகிறது.
-----தொடரும்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

மானூர் குளமும் சுற்றியுள்ள ஊர்களும்..
மானூர் குளமும் சிப்காட் வளாகமும்..
மானூர்குளமும் அரசியலும்...
என அடுத்தடுத்த பதிவுகளில் உண்மைகள் உங்களைச் சுடுவதற்கு காத்திருக்கின்றன.
(கொசுறு: தாமிரபரணியாற்றில் இரண்டு நாட்கள்முன்னர் இரு கரை பொங்க வெள்ளம் சென்றது).

Friday 5 October 2012

திருநெல்வேலி

திருநெல்வேலி (ஆங்கிலம்:Tirunelveli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகருமாகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வொரு ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார்.
சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தது. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.
மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி என பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.
ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.
-------------------------------------------------------

திருநெல்வேலித் தமிழ்

 

தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,
  • நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
  • அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
  • நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
  • ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
  • முடுக்குது - நெருக்குகிறது
  • சொல்லுதான் - சொல்கிறான்  -------------------------------------------------------------------------------------------------------- 
  • அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது
  • ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .
  • பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!!)
  • கொண்டி - தாழ்ப்பாள்
  • பைய - மெதுவாக
  • சாரம் - லூங்கி
  • கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.
  • வளவு - முடுக்கு,சந்து
  • வேசடை - தொந்தரவு
  • சிறை - தொந்தரவு
  • சேக்காளி - நண்பன்
  • தொரவா - சாவி
  • மச்சி - மாடி
  • கொடை - திருவிழா
  • கசம் - ஆழமான பகுதி
  • ஆக்கங்கெட்டது - not cconstructive (a bad omen)
  • துஷ்டி - எழவு (funeral)
  • சவுட்டு - குறைந்த
  • கிடா - பெரிய ஆடு (male)
  • செத்த நேரம் - கொஞ்ச நேரம்
  • குறுக்க சாய்த்தல் - படுத்தல்
  • பூடம் - பலி பீடம்
  • அந்தானி - அப்பொழுது
  • வாரியல் - துடைப்பம்
  • கூவை - ஆந்தை an owl (bird of bad omen)
  • இடும்பு - திமிறு (arrogance)
  • சீக்கு - நோய்
  • சீனி - சர்க்கரை (Sugar)
  • ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 4 1/2 செண்ட் நிலம்
  • நொம்பலம் - வலி
  • கொட்டாரம் - அரண்மனை
  • திட்டு - மேடு
  • சிரிப்பாணி - சிரிப்பு
  • திரியாவரம் - குசும்புத்தனம்
  • பாட்டம் - குத்தகை
  • பொறத்தால - பின்னாலே
  • மாப்பு - மன்னிப்பு
  • ராத்தல் - அரை கிலோ
  • சோலி – வேலை
  • சங்கு – கழுத்து
  • செவி – காது
  • மண்டை – தலை
  • செவிடு – கன்னம்
  • சாவி – மணியில்லாத நெல், பதர்
  • மூடு – மரத்து அடி
  • குறுக்கு – முதுகு

 நன்றி விக்கிபீடியா